மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள சோத்தமங்கலத்தை சேர்ந்தவர் பூசமணி (வயது48). விவசாய தொழிலாளி. இவர் கேரளாவிற்கு சென்று வேலை செய்யப்போவதாக கடந்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி அன்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதிலிருந்து ஒரு சில நாட்கள் தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசி உள்ளார். பின்னர் அவருடைய செல்போன் 'சுவிட்ச்ஆப்' ஆகிவிட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சோத்தமங்கலம் அருகே உள்ள அய்யாவையனாற்றங்கரை பகுதியில் ஒரு உடல் சிதைந்து எலும்புக்கூடாக கிடப்பதாக மாடுமேய்க்க சென்ற சிறுவர்கள் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த பூசமணி மகன் தர்மசீலன் அங்கு சென்று பார்த்தபோது அந்த எலும்புக்கூட்டின் அருகே செல்போன், ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கிடந்தது. இதை பார்த்தபோது இறந்தது பூசமணி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தர்மசீலன் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து பூசமணி எப்படி இறந்தார்? அவருடைய சாவில் உள்ள மர்மம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.