தூத்துக்குடியில் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
தூத்துக்குடியில் கொலை வழக்கில் தேடப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரை சேர்ந்தவர் லூயிஸ் பெட். இவரது மகன் அலெக்ஸ் (வயது 31). தாளமுத்துநகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர் மீது சில திருட்டு வழக்குகள் இருந்து உள்ளன. இவர் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி இரவு தூத்துக்குடி முருகேசன்நகரில் உள்ள காட்டுப்பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அலெக்ஸ் குடிபோதையில் களக்காடு சர்ச் தெருவை சேர்ந்த ஆல்வின் மகன் ஜான்சன் (37) என்பவரது கார் கண்ணாடியை உடைத்தாராம்.. இது தொடர்பாக ஜான்சனுக்கும், அலெக்சுக்கும் விரோதம் இருந்து உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான்சன் தனது நண்பர் ஜெயசீலன் உதவியுடன் அலெக்சை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதனால் சிப்காட் போலீசார் ஜெயசீலனை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவான ஜான்சனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று தூத்துக்குடியில் ஜான்சனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.