குன்னம் அருகே 2 வீடுகளில் திருடியவர் கைது
குன்னம் அருகே 2 வீடுகளில் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
2 வீடுகளில் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளையும், மேலும் அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரத்தையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது தொடர்பான புகார்களின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் வழிக்காட்டுதலின் பேரில், மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் நன்னை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்து கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
4 பவுன் நகைகள் மீட்பு
இதில், அவர் தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே குருவாடிபட்டி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் (வயது 38) என்பது தெரியவந்தது. இவர், நல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோரது வீடுகளில் திருடியது தெரியவந்தது. பின்னர் மதியழகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து 4 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்த மங்களமேடு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.