விவசாயியிடம் ரூ.80 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது

கோட்டக்குப்பம் அருகே விவசாயியிடம் ரூ.80 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

Update: 2022-11-01 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 54), விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 47 சென்ட் நிலத்தை ஜெகதீசன் என்பவருக்கு கடந்த 2012-ல் ரூ.1 லட்சத்துக்கு அடமானம் போட்டிருந்தார். இவருடைய 2-வது மகன் மோகன்குமார் வேலையில்லாமல் இருந்து வந்ததால் வேலை ஏற்பாடு செய்து தரும்படி அரிகிருஷ்ணன், தனக்கு பழக்கமான சுவாமிநாதனிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அச்சல்வாடியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சீனிவாசனுக்கு(31) சொந்தமான புதுச்சேரியில் உள்ள ஷேர் மார்க்கெட் கம்பெனியில் மோகன்குமாருக்கு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார். அப்போது அதே கம்பெனியில் பங்குதாரராக இருந்த புதுச்சேரி மாநில ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாருக்கும், மோகன்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அடமானத்தில் உள்ள நிலத்தை மீட்டு விற்பனை செய்ய உள்ளதாக மோகன்குமார் கூறினார். இதைக்கேட்ட சீனிவாசனும், சுகுமாரும் நாங்களே நிலத்தை ரூ.82 லட்சத்துக்கு வாங்கிக்கொள்கிறோம் என்று கூறி அரிகிருஷ்ணனை அணுகி விலை பேசியுள்ளனர்.

இதையடுத்து அரிகிருஷ்ணன், தான் அடமானம் வைத்திருந்த நிலத்தை கடந்த 3.1.2014 அன்று வட்டியும் அசலுமாக சேர்த்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மீட்டு அதே தேதியில் சீனிவாசனுக்கு வானூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்து கொடுத்தார். மீதமுள்ள ரூ.79 லட்சத்து 50 ஆயிரத்தை அரிகிருஷ்ணன் கேட்டதற்கு பெரிய தொகையாக இருப்பதால் பத்திரப்பதிவு நடந்தவுடன் தருவதாக கூறிவிட்டு இருவரும் சென்றுள்ளனர். ஆனால் சீனிவாசனும், சுகுமாரும் அந்த தொகையை அரிகிருஷ்ணனுக்கு கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். அதன் பிறகு சீனிவாசன், அந்த நிலத்தை தனது பங்குதாரரான சுகுமாருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட அரிகிருஷ்ணன், சுகுமாரை அணுகி தனது நிலத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர், ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சீனிவாசன், சுகுமார் ஆகிய இருவரின் மீதும் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்