ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபர் கைது..!
ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒகேனக்கல்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி கர்நாடக- தமிழக எல்லையான ஓசூர் சானமாவு பகுதிக்கு வருகின்றன. அங்கிருந்து அவ்வப்போது ஒகேனக்கல்லுக்கும் வரும்.
இந்த நிலையில், நேற்று ஒகேனக்கல் சாலையோரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி இறங்கி வரும் ஒற்றை யானை முன்பு ஒரு நபர் அலட்சியமாக நடந்து செல்கிறார். யானையை பார்த்ததும் அச்சப்படாத அந்த நபர் யானையை நோக்கி கைக்கூப்பி கும்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் சம்பந்தப்பட்ட நபரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சாலையோரத்தில் யானையை தொந்தரவு செய்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். யானையை தொந்தரவு செய்த நபரின் வீடியோவை பார்த்த வனத்துறையினர், சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தர்மபுரி மாவட்டம் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த மீசை முருகேசன் என்பது தெரியவந்துள்ளது.