போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த பெண் போலீசை தாக்கியவர் கைது
கரூரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த பெண் போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
பெண் போலீஸ் மீது தாக்குதல்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளியை சேர்ந்தவர் மதி (வயது 36). இவர் கரூர் பசுபதிபாளையத்தில் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று மதி கரூர் சுங்ககேட் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஒன்று அதிவேகமாக வந்தது.இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை பெண் போலீஸ் மதி நிறுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஆத்திரமடைந்து மதியை தான் கையில் வைத்திருந்த சாவியை எடுத்து குத்தினார். இதனால் மதி நிலை குலைந்துபோனார். மேலும் தகாத வார்த்தையால் திட்டினார்.
கைது
இதையடுத்து அந்தநபரிடம் விசாரித்தபோது, அவர் கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 49) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மதி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.