தாத்தா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது
பேரளம் அருகே தகராறை சமாதானம் செய்ய வந்த தாத்தா மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேரளம் அருகே தகராறை சமாதானம் செய்ய வந்த தாத்தா மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாத்தா மீது தீ வைத்தார்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வடுககுடி பகுதியை சேர்ந்தவர் ரேனையன்(வயது75). இவருடைய மகன் லட்சுமணன். இவர், வனத்துறையில் வன பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் முகிலன்(20), கூலித்தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு லட்சுமணனுக்கும், அவருடைய மகன் முகிலனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை அங்கிருந்த முகிலனின் தாத்தா ரேனையன், சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த முகிலன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து தனது தாத்தா மீது ஊற்றி தீ வைத்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
உடல் மீது தீப்பற்றி எரிந்ததில் ரேனையன் அலறி துடித்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்து தீயை அணைத்து ரேனையனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்தனர்.