பெண்ணை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

தஞ்சையில், பெண்ணை கற்பழித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-03 19:57 GMT

தஞ்சையில், பெண்ணை கற்பழித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காயங்களுடன் பெண் பிணம்

தஞ்சை மணிமண்டபம் அருகே கடந்த 30-ந் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

இதுகுறித்து போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்த பெண் தஞ்சை அருகேயுள்ள பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.அந்த பெண் சமீபத்தில் காணாமல் போனதும் இது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் உறவினர்களால் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

கற்பழித்து கொலை

இந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவரம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தென்கரையை சேர்ந்த ராமசாமி மகன் சாஸ்திரி(30) இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணை சாஸ்திரி பாலியல் வல்லுறவு செய்தபோது தள்ளு முள்ளு நடந்ததும், இதனால் கீழே விழுந்த அந்த பெண் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சாஸ்திரியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்