மேய்ச்சல் நிலமாக மாறிய மல்லல் கண்மாய்

முதுகுளத்தூர் அருகே மேய்ச்சல் நிலமாக மல்லல் கண்மாய் மாறி போனது. எனவே இங்கு வைகை ஆற்று தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

Update: 2022-11-19 19:06 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே மேய்ச்சல் நிலமாக மல்லல் கண்மாய் மாறி போனது. எனவே இங்கு வைகை ஆற்று தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

ஆற்றில் கலக்கும் வைகை நீர்

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பார்த்திபனூர் மதகுஅணை வழியாக வந்து பரமக்குடி மஞ்சுர் வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு வைகை தண்ணீர் வருகிறது. ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் இருந்து சக்கரகோட்டை கண்மாய், திருஉத்தரகோசமங்கை கண்மாய், களக்குடி கண்மாய் என பல கண்மாய்களுக்கும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றது.

காவனூர் அருகே உள்ள பெரிய கண்மாய் கலுங்கு பகுதியில் இருந்து கடலுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வைகை தண்ணீர் கடலில் கலந்தும் வீணாகி வருகின்றது. இதனிடையே ஒரு வாரத்திற்கு மேலாகவே வைகை தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்து கடலில் கலந்தும் வீணாகி வரும் நிலை இருந்து வருகின்றது.

மேய்ச்சல் நிலமாக மாறியது

மாவட்டத்தில் இன்னும் பல கண்மாய்கள் நிரம்பாத நிலை உள்ளது. குறிப்பாக முதுகுளத்தூர் அருகே உள்ள வடக்கு மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய் அவ்வப்போது பெய்த மழை தண்ணீர் தான் தேங்கி உள்ளது. மிகப்பெரிய கண்மாயாக இருந்தும் தண்ணீர் இல்லாததால் ஆடுகள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் இடமாகவே அந்த கண்மாய் மாறி உள்ளது. பருவமழை சீசன் தொடங்கியும் போதிய அளவு மழையும் இல்லாததால் கிராமத்து விவசாயிகள் மழையை எதிர்பார்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வைகை ஆற்றில் தண்ணீர் வந்தும் இது போன்ற கண்மாய் நிரம்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையே என குற்றம் சாட்டி உள்ளனர்.

வைகை தண்ணீரை திருப்பி விட வேண்டும்

இது குறித்து மல்லல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தம்பிதுரை கூறும் போது:- மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் இதுவரை ஒரு முறை கூட வந்தது கிடையாது. வைகை தண்ணீர் இந்த கண்மாய்க்கு வந்ததை எங்கள் கிராம மக்கள் யாரும் பார்த்ததும் கிடையாது. வைகை தண்ணீர் முதுகுளத்தூர் வந்து அங்கிருந்து தான் மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரவேண்டும். வைகை தண்ணீர் வரும் பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வர முடியாத நிலை உள்ளது. எங்கள் கிராமத்தின் மிக அருகில் உள்ள மானாங்குடி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வந்து அந்த கண்மாய் நிரம்பி காட்சியளிக்கின்றது. மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கண்மாயை நம்பி 350 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்து வருகிறோம். எனவே இந்த கண்மாய் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்