குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும்-கலெக்டர் வலியுறுத்தல்

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அங்கன்வாடி பணியாளர்களின் பங்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று புத்தறிவு பயிற்சியில் கலெக்டர் கற்பகம் கூறினார்.

Update: 2023-07-15 18:35 GMT

புத்தறிவு பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான புத்தறிவு பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி கூறியதாவது:-குழந்தை திருமணம் என்பது சட்டப்படி குற்றம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடப்பது குறித்து நீங்கள் தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பெண் பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் கல்வி கற்பதை நிறுத்தி விடக்கூடாது. பொருளாதார காரணத்தால் பெண் குழந்தையின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

குழந்தை திருமணம்

மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடக்காமல் தடுப்பது, பெண்கள் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு செல்கிறார்களா? என்பதை கண்காணிப்பது அங்கன்வாடி பணியாளர்களின் முக்கிய பணியாகும். நமது வீட்டு பெண் குழந்தைகளை 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து கொடுப்போமா என்பதை சிந்தியுங்கள். உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடப்பது குறித்து தகவலறிந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டரான என்னை 9444175000 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள்.

பெண்களுக்கு எதிரான எந்த ஒரு குற்றம் நிகழ்ந்தாலும் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அங்கன்வாடி மைய பணியாளர்களின் பங்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும். பெண் பாலின விகிதம் குறைந்தால் சமூக பொருளாதார சீர்கேடுகள் அதிகளவில் ஏற்படும். பாலின விகித பிறப்பு சமமாக இருக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுப்பதும், பெண் குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்துவதும் நம் அனைவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு திட்டங்கள்

மேலும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தஸ்கீர், குழந்தை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் இனஸ்பெக்டர் விஜயலட்சுமி, தாய் சேய் நல அலுவலர் சந்தியா, வக்கீல் தினேஷ் ஆகியோர் பெண் குழந்தைகளை காப்பது குறித்தும், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது, அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட சமூகநல அலுவலர் ரவிபாலா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்