மக்காச்சோள அறுவடை பணி தீவிரம்

பழனி பகுதியில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. விலைவீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-06-22 16:39 GMT

மக்காச்சோள சாகுபடி

பழனியை அடுத்த மானூர், கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மக்காச்சோள சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. மானாவாரி மற்றும் கிணற்று பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளத்தை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்த மக்காச்சோளம், தற்போது நன்கு விளைந்துள்ளதால் அவற்றை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்காச்சோள செடிகளில் இருந்து பறிக்கப்படும் கதிர்களை சேகரித்து வயல் பகுதியில் குவித்து வைத்துள்ளனர்.

விவசாயிகள் கவலை

பின்னர் கதிர்களில் இருந்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து தனியாக பிரித்து எடுத்து தார்ப்பாயில் காய வைக்கின்றனர். அதன்பிறகு அவற்றை 100 கிலோ எடை கொண்ட மூட்டையாக கட்டி விற்பனை செய்கின்றனர்.

உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகள் பலர் நேரடியாக வந்து மக்காச்சோளத்தை விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு மக்காச்சோள வரத்து அதிகமாக உள்ளது. இதன்காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் (100 கிலோ) மக்காச்சோளம் ரூ.2,500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. ஓரிரு மாதங்களில் மக்காச்சோளம் விலை அதிகரிக்கும் என்று கருதி இருப்பு வைத்துள்ளோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்