ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பராமரிப்பு பணி மும்முரம்

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் எடுத்த நடவடிக்கையால் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பராமரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.

Update: 2022-11-27 18:45 GMT

கோத்தகிரி

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டர் எடுத்த நடவடிக்கையால் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் பராமரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.

மாணவர் விடுதி

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் அருகே அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது. இதில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கடந்த 1-ந் தேதி இரவு 8.30 மணியளவில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள் தங்கும் அறைகள், சமையல் கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர், விடுதி காப்பாளரிடம் 100 பேர் தங்க வைக்க வேண்டிய விடுதியில் வெறும் 20 பேர் தங்கி உள்ளனர்.

எனவே மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவர்களிடம் குறைகளை கேட்டபோது, விடுதியின் கழிப்பிடம், வராண்டா, தங்கும் அறைகளின்மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்துள்ளதால், மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் சிரமமாக உள்ளது என்றனர். உடனடியாக பராமரிப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.

பராமரிப்பு பணி

இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி மாணவர்கள் விடுதியில் பராமரிப்பு பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக விடுதி கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் தண்ணீர் தொட்டியின் கான்கிரீட்டுகளில் தண்ணீர் கசிந்து இறங்காத வகையில், ரசாயன கலவையுடன் சிமெண்டு கலந்து பூசி மேற்கூரைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விடுதி வளாகத்தை ஒட்டி வளர்ந்துள்ள சாம்பிராணி மரத்தின் வேர்கள், கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அந்த மரத்தை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதியில் பராமரிப்பு பணிமும்முரமாக நடைபெற்று வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக பராமரிப்பு பணிகள் செய்ய உத்தரவிட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்