மைல் கல்லின் வண்ணங்கள் சொல்லும் சேதி தெரியுமா?

Update: 2022-11-10 15:37 GMT


சாலையோர மைல் கற்களில் பூசப்பட்டுள்ள வண்ணங்கள் மூலம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

வழிகாட்டி

நாம் சாலைகளில் பயணம் செய்யும்போது அடுத்து வரவிருக்கும் ஊர் மற்றும் அதன் தொலைவு ஆகியவற்றை சாலையோரத்திலுள்ள ஒரு கல்லில் எழுதி வைத்திருப்பதை பார்த்திருப்போம்.தூரத்தை அளக்கும் மைல் என்னும் அளவு கைவிடப்பட்டு தற்போது கிலோமீட்டர் என்ற அளவிலேயே தூரங்கள் கணக்கிடப்பட்டு வந்தாலும் இந்த கல்லுக்கு இன்றளவும் மைல் கல் என்று தான் பெயர் உள்ளது. உழைத்து, களைத்து வரும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு காத்திருப்பவர்கள் பல நேரங்களில் இந்த கல்லில் அமர்ந்து ஓய்வெடுப்பதை பார்க்க முடியும். நாடு முழுவதும் உள்ள சாலைகளின் ஓரங்களில் இந்த மைல் கற்கள் நடவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டி வருகிறது. அந்தந்த பகுதியில் பழக்கத்தில் இருக்கும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் இந்த கற்களில் எழுதப்பட்டிருக்கும். ஆரம்ப காலங்களில் கல்வி அறிவு இல்லாதவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக கல்லில் செதுக்கப்பட்ட குழிகள் மூலம் வழி காட்டியதாக கூறப்படுகிறது.

மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என இந்த கற்களின் மீது வெவ்வேறு வண்ணங்கள் பூசப்பட்டிருப்பது வெறும் அழகுக்காக மட்டும் என்பதாகவே பலரும் நினைத்திருப்பார்கள்.ஆனால் அந்த வண்ணங்கள் அந்த சாலை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்னும் தகவலை சொல்வதாக உள்ளது.

வண்ணங்கள்

மைல் கல்லின் வண்ணங்களை வைத்து நாம் தகவல்கள் மற்றும் புகார்களை எந்த துறைக்கு வழங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்தவகையில் மைல் கல்லின் மேல் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருந்தால் அது தேசிய நெடுஞ்சாலையாகும். மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த சாலை கனரக வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சாலையின் பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு சுங்கம் வசூலிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வையில் அனுமதிக்கப்படுகிறது. மைல் கல்லின் மேல் பச்சை நிறம் பூசப்பட்டிருந்தால் அது மாநில நெடுஞ்சாலையைக் குறிக்கிறது.மாநிலங்களுக்குள் மாவட்டங்களை இணைக்கும் வகையிலான இந்த சாலை கனரக வாகனங்கள் செல்லும் தரத்தில் அமைக்கப்படும். இந்த சாலையின் பராமரிப்பை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும்.ஒரு மாவட்டத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான சாலைகள் மாவட்ட சாலையாகும். இந்த சாலை ஓரங்களில் உள்ள மைல் கற்களில் நீல நிறம் பூசப்பட்டிருக்கும். அத்துடன் கிராமங்களை நகரச் சாலைகளோடு இணைக்கும் மாவட்ட இதர சாலைகளில் உள்ள மைல் கற்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது. அந்த வகையில் கணியூர்-மைவாடி சாலையில் தற்போது விரிவாக்கப் பணிகள் நடந்துள்ளது. இதனையடுத்து சாலையோர மைல் கற்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்