பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி விழா மற்றும் திருக்கார்த்திகை தினங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 40-வது ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதனையொட்டி பின்பு தீபக்கொப்பரைக்கும், திரிக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு எளம்பலூர் மலை உச்சிக்கு எடுத்துசெல்லப்பட்டது. நேற்று பிரம்மரிஷிமலை அடிவாரத்தில் உள்ள நளினி அம்மன் உடனுறை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் அன்னை சித்தர் ராஜகுமார்சுவாமி அருளாசியுடன் காலையில் கோபூஜை, அஸ்வபூஜையுடன் கணபதிஹோமம், 210 சித்தர்கள் யாகம் நடந்தது. மாலையில் ருத்ர ஜெபம், 210 மகா சித்தர்கள் யாகம், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. அதன்பிறகு 6 மணிக்கு மலைஅடிவாரத்தில் காங்கோத்திரி ஸ்ரீநாராயணதீர்த்த மகாசுவாமிகள் செப்புக்கொப்பரையில் தீபம் ஏற்றி மகாதீப உற்சவத்தை தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து மலை உச்சியில் உள்ள கொங்கணர் தூண் அருகே மாபெரும் செப்புக்கொப்பரையில் 1008 லிட்டர் பசு நெய், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரியுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், 108 கிலோ பூங்கற்பூரம் இவற்றுடன் வானவேடிக்கை முழங்க மகா கார்த்திகை தீபஜோதி ஏற்றப்பட்டது. மலை அடிவாரத்தில் மாபெரும் அன்னதானமும், சாதுக்களுக்கு வஸ்திரதானமும் வழங்கப்பட்டது. சிவபெருமான் மற்றும் முருகனின் பெருமைகளை விளக்கும் சிவபுராணம், கந்தபுராணம், பன்னிருதிருமுறைகள் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.