மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை தோளில் சுமந்து சென்று வழிபட்டனர்.

Update: 2022-07-06 18:05 GMT

தேர் திருவிழா

கரூர் மாவட்டம், லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மகா மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 20 அடி உயரமுள்ள தேரில் தேங்காய், மலர் மாலைகள், வெற்றிலை ஆகியவற்றை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா மாரியம்மன் தேரில் எழுந்தருள செய்யப்பட்டது.

11-ம் தேதி மஞ்சள் நீராட்டு

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை தங்களின் தோளில் சுமந்துகொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். அப்போது பொதுமக்கள் பூ, பழவகைகள், தேங்காய், மாவிளக்கு உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்தனர்.

இதையடுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. வருகிற 11-ம் தேதி மஞ்சள் நீராடி கரகம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்