கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் மகா தீபம் ஏற்றம்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

Update: 2022-12-06 20:42 GMT

கார்த்திகை தீபத்திருவிழா

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வங்களை வழிபட்டனர். இதேபோல் கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மகா தீபம் ஏற்றப்பட்டது

கடலூரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று காலை முதல் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. அந்த வகையில் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவில், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், முதுநகர் சந்தி மாரியம்மன் கோவில், புதுக்குப்பம் சித்தி விநாயகர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் வேத விநாயகர் கோவில், புதுக்குப்பம் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கோவில் கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அகல்விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்