மக்னா யானையை பிடிக்க வேண்டும்
விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி,
விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
யானை அட்டகாசம்
தர்மபுரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகளியாறில் விடப்பட்ட மக்னா யானை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் உள்ள ஊருக்குள் புகுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் யானையை பிடித்து மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து டாப்சிலிப் வழியாக சேத்துமடை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மக்னா யானை வந்தது.
இதையடுத்து யானை ஊருக்குள் வருவதை தடுக்க கும்கி யானைகளுடன், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை யானை தாக்கியது. இந்த நிலையில் வனப்பகுதியையொட்டி உள்ள மாந்தோப்புகளில் இரவு புகுந்து யானை அட்டகாசம் செய்து வருகிறது. தற்போது மாம்பழம் சீசன் என்பதால் யானை மாங்காய்களை சாப்பிட்டு, மரங்களை முறித்து போட்டு விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு பாதுகாப்பு
கடந்த 10 நாட்களாக யானையால் தொந்தரவு உள்ளது. வனத்துறை வாகனத்தையும் கீழே தள்ளியதில் வனத்துறையினர் காயமடைந்தனர். செமனாம்பதியில் இருந்து தம்பம்பதி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு விளை நிலங்கள் தான் இருக்கிறது. விவசாயிகள் தோட்டத்தில் குடியிருந்து வருகின்றனர். தோட்டத்தில் இருந்து பால் கறந்து வேட்டைக்காரன்புதூருக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
யானை காலை 7 மணிக்கு வந்து விடுகிறது. சாலை, நடைபாதையில் யானை வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு பால்காரரை தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் விவசாயிகள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.