கோவையில் பிடிபட்ட மக்னா யானை வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்டது
கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை காரமடை அருகே முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வால்பாறை வனப்பகுதியில் மக்னா யானை விடப்பட்டது.
கோவை
கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை காரமடை அருகே முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வால்பாறை வனப்பகுதியில் மக்னா யானை விடப்பட்டது.
வனத்தை விட்டு வெளியேறியது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெரியூர் ஈச்சம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் மக்னா யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்தது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 5-ந் தேதி பெரியூர் ஈச்சப்பள்ளம் பகுதியில் அந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.
அந்த பகுதியில் சில நாட்கள் வனத்திற்குள் சுற்றித்திரிந்த மக்னா யானை கடந்த 20-ந் தேதி இரவு வனத்தை விட்டு வெளியேறியது. அந்த மக்னா யானை கோழிக்கமுத்தி, செம்மனாம்பதி வழியாக கிராமப்புற குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். இந்த மக்னா யானை கொஞ்சம், கொஞ்சமாக கிணத்துக்கடவு, மதுக்கரை வழியாக 22-ந் தேதி குனியமுத்தூர் பிள்ளையார்புரம் பகுதியை அடைந்தது.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
இந்த மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 50 போலீசார் பணியமர்த்தப்பட்டனர். மக்னா யானையை வனத்துறையினர் கடும் முயற்சி செய்து வனத்திற்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானை மீண்டும், மீண்டும் குடியிருப்பு பகுதியிலேயே வலம் வந்தது. மேலும் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் நடந்து வந்த முதியவரையும் அந்த மக்னா யானை தாக்கியது. காயமடைந்த முதியவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மக்னா யானை பேரூர் பகுதியில் ஊடுருவியது. இங்குள்ள நொய்யல் ஆற்று வழித்தடத்தில் உள்ள தேவி சிறை அணைக்கட்டு அருகே ஒரு வாழை தோட்டத்தில் அந்த மக்னா யானை பதுங்கி இருந்தது. வனத்திற்குள் செல்லாமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிலேயே அந்த மக்னா யானை சுற்றி வந்ததால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து சின்னத்தம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வனத்துறையினர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும் அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
விடிய, விடிய போராட்டம்
மயங்கிய நிலையில் இருந்த மக்னா யானையை கடும் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். அட்டகாசம் செய்யும் இந்த மக்னா யானையை எந்த பகுதிக்கு கொண்டு சென்று விடுவது என்று வனத்துறையினர் இடையே குழப்பம் நிலவியது. பின்னர் இந்த யானையை காரமடை வெள்ளியங்காடு அருகே உள்ள பில்லூர் அணைப்பகுதியான எழுத்துக்கள்புதூர் வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கோவையில் இருந்து மக்னா யானை லாரி மூலம் முள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காரமடை வெள்ளியங்காடு, தாயனூர், தோலம்பாளையம், ஆதி மாதையனூர், முத்துக்கல்லூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மக்னா யானையை அந்த பகுதியில் விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மக்னா யானையை ஏற்றி வந்த லாரியை வெள்ளியங்காடு பகுதியில் அதிகாலை 2½ மணி அளவில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குளிர் நிலவியதால் சாலையோரம் விறகுகளை தீ வைத்து எரித்து குளிர் காய்ந்தனர்.
திரும்பி சென்றது
பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் வனத்துறையினர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்னா யானை வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து விடும். மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே வேறு பகுதியில் கொண்டு விடும்படி கூறினர். போராட்டம் தொடர்ந்ததையடுத்து வேறுவழியின்றி வனத்துறையினர்மேட்டுப்பாளையம் வனச்சரக மரக்கிடங்கு பகுதிக்கு மக்னா யானையை காலை 7.30 மணிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் மக்னா யானை மயக்கம் தெளிந்தது. இதனால் மக்னா யானை லாரியை சேதப்படுத்தும் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் மீண்டும் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து சிறிது நேரத்தில் மக்னா யானை மீண்டும் மயக்கம் அடைந்தது. மக்னா யானையை எங்கு கொண்டு சென்று விட்டாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் அதனை வால்பாறை அருகே உள்ள மாணம்பள்ளி வனப்பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது.
வால்பாறை வனப்பகுதி
இதனை தொடர்ந்து 2 மணி நேர ஓய்விற்கு பின்னர் மக்னா யானை மேட்டுப்பாளையம் மரக்கிடங்கில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதாலும் தொடர்ந்து பல மணி நேரம் லாரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாலும் அந்த மக்னா யானை மிகவும் சோர்வாக காட்சியளித்தது. இதனால் யானையின் உடல் நிலை குறித்து கால்நடை டாக்டர் சுகுமாறன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவ்வப்போது பரிசோதித்தனர். மேலும்தேவைப்படும் போது மக்னா யானைக்கு சிகிச்சையும் அளித்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பல மணி நேர பயணத்திற்கு பின்னர் மக்னா யானையுடன் சென்ற லாரி வால்பாறை வனப்பகுதியை மாலை 6 மணி அளவில் அடைந்தது. பின்னர் அங்கிருந்து மானாம்பள்ளி வனப்பகுதிக்கு மக்னா யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு யானையின் மயக்கம் தெளிய ஊசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் இரவு 8 மணி அளவில் மக்னா யானை லாரியில் இருந்து விடுவிக்கப்பட்டது. லாரியை விட்டு இறங்கியதும் மக்னா யானை மெதுவாக வனப்பகுதியை நோக்கி சென்றது. மேலும் அந்த பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இருப்பினும் மக்னா யானையை கண்காணிக்க வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மக்னா யானையை காரமடை வனப்பகுதியில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 25 மணிநேரம் அதனை லாரியில் நிறுத்தி வைத்து அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.