மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில்பாதை பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்

மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை பணிகள் 3 மாதத்தில் முடிவடையும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.

Update: 2022-12-08 18:45 GMT

மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை பணிகள் 3 மாதத்தில் முடிவடையும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.

இரட்டை ரெயில் பாதை

மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் ரூ.11 ஆயிரத்து 822 கோடி மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த பணிகள் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையம் வரை முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று தூத்துக்குடி மீளவிட்டானுக்கு வந்தார்.

அங்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அவர் அந்த பாதையில் உள்ள 4 சிறிய பாலங்கள், ரெயில்வே மேம்பாலம், மின்மயமாக்கல் பணிகள், ரெயில்பாதை இணைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

3 மாதங்களில்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, மதுரை-தூத்துக்குடி மீளவிட்டான் வரையிலான இரட்டை ரெயில்பாதை பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிக்கப்படும். அதாவது பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அதே நேரத்தில் தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயில்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் இரட்டை ரெயில் பாதை தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வரை உள்ள பாதையுடன் இணைக்கப்பட உள்ளது என்று கூறினார்.

ஆய்வின் போது, மதுரை ரெயில்வே கோட்டமேலாளர் பத்மநாபஅனந்த், முதுநிலை பொறியாளர் பிரவீனா, தனிச்செயலாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்