மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை தொடக்கம் - 10 நாட்கள் நடக்கிறது
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
மாரியம்மன் கோவில்
மதுரை நகரை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கூண்பாண்டியன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே தற்போது கோவில் அமைந்துள்ள பகுதி மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அந்த காட்டை திருத்திய சமயத்தில் வைகையில் அம்மன் விக்ரகம் கிடைத்தது. அதனை வைகை ஆற்றின் தென்கரையில் தற்போது கோவில் வீற்றுள்ள பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக அறியப்படுகிறது. மாரியம்மனும், துர்க்கையும் வெவ்வேறு வடிவங்களாக இருந்தபோதிலும், இருவரும் அம்பிகையின் அம்சமாகவே திகழ்கின்றனர்.
அதனை உணர்த்தும் விதமாக இந்த கோவிலில் அன்னை மாரியம்மனாக கைகளில் பாசம், அங்குசம், ஏந்தி, இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கி அருள்பாலிக்கிறார்.. துர்க்கையாக அம்மனின் இடது காலுக்கு கீழே எருமை தலை உள்ளது. மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்பு போரில் வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் அம்மனை வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார்கள். பிற்காலங்களில் இந்த அம்மனே மதுரையின் எல்லை காவல் தெய்வமாகவும், தெப்பக்குளம் மாரியம்மனாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பங்குனி திருவிழா கொடியேற்றம்
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்த மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு பங்குனி திருவிழா வருகிற 11-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவையொட்டி மாரியம்மன் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைகிறார். அங்கு கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும்.
அதை தொடர்ந்து நாளை (11-ந் தேதி) மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரரிடமிருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து நான்கு சித்திரை வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்றடைவார். அங்கு இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தீச்சட்டி
விழாவில் 5-ம் நாள் 15-ந் தேதி இரவு 7.25 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு செலுத்துவர். அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து காட்சி அளிப்பார். 7-ம் நாள் 17-ந் தேதி திருவிளக்குபூஜையும், பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு 18-ந் தேதி நடக்கிறது.
அதை தொடர்ந்து 19-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் 20-ந்தேதி காலை 6 மணி முதல் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இரவு 7.25 மணிக்கு மேல் தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.