மதுரை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அபராதம்
மதுரை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
நெல்லையை சேர்ந்தவர் புனிதா. இவர் தனது சகோதரருடன் திருச்சிக்கு செல்ல செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்து இருந்தார். அப்போது 05.03.2016-ந் தேதிக்கு பதிலாக ரெயில்வே நிர்வாகம் 05.06.2016-க்கு தவறுதலாக முன்பதிவாகிவிட்டது. ஆகையால் புனிதாவின் சகோதரர் நிர்மல் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புனிதா வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி சேகர், உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சாந்தி ஆண்டியப்பன் ஆகியோர் விசாரித்தனர். இதையடுத்து முன்பதிவு மைய கிளார்க் மற்றும் மதுரை ெரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் கோர்ட்டு உத்தரவிட்டது.