மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

Update: 2023-06-03 19:06 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

மீனாட்சி அம்மன் கோவில்

தமிழகத்தில் உள்ள முக்கியமான முதுநிலை கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருத்தணி முருகன் கோவில், சென்னை தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இந்த 4 கோவில்களும் திடீரென்று துணை கமிஷனர் அந்தஸ்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தென்காசி மாவட்டம் பண்மொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் உதவி கமிஷனர் அருணாசலம் பதவி உயர்வு பெற்று துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரி பணியிடம் தகுதி குறைப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோவிலில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் தடைபடும் என்றும், துணை கமிஷனர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட அதிகாரியால் தன்னிச்சையாக எந்த வித முடிவும் எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசாணை

மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மற்றும் தீப்பற்றி எரிந்த வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் துணை கமிஷனர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட அதிகாரியால் அந்த பணிகளை விரைந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் சார்பில் அரசாணை ஒன்று கடந்த மார்ச் மாதம் வெளியானது.. அதில் தற்காலிகமாக துணை கமிஷனர் நிலைக்கு நிலையிறக்கம் செய்யப்பட்ட 4 கோவில் பணியிடங்கள் மீண்டும் இணை கமிஷனர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இணை கமிஷனர் நியமனம்

இதை தொடர்ந்து தமிழக அரசு தமிழகத்தில் உள்ள கோவில்களில் காலியாக உள்ள இணை கமிஷனர் பணியிடங்களுக்கு அதிகாரிகளை நியமித்தது. அதன்படி 15 துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்களாக பதவி உயர்வு பெற்று பல்வேறு கோவில்களுக்கு நியமிக்கப்பட்டனர்.

அதில் திண்டுக்கல் மாவட்ட இந்து சமயஅறநிலையத்துறை சரிபார்ப்பு துறையில் துணை கமிஷனராக இருந்த கிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதே போன்று ராமேசுவரம் கோவில் துணை கமிஷனர் மாரியப்பன் பதவி உயர்வு பெற்று அதே கோவிலுக்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் இணை கமிஷனராக தரம் உயர்த்தப்பட்டு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்