மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

பிரேத பரிசோதனையில், கவிதா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருப்பது உறுதியானது.

Update: 2024-02-02 07:41 GMT

மதுரை:

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). இவருடைய மனைவி கவிதா (34). பாடகியான இவர் இசைக்குழு ஒன்றின் மூலம் மேடைகளில் பாடி வந்தார். அந்த குழுவில் நாகராஜ் மைக்செட் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இ்ந்த நிலையில் சமீப காலமாக கவிதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. அதற்காக கண் ஆஸ்பத்திரியில் பரிசோதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரத்தம் கக்கிய நிலையில் கவிதா கிடந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கவிதா இறந்துவிட்டது தெரியவந்தது.

கவிதாவின் உடலில் காயங்கள் இல்லை என்பதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டதாக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். அதே நேரத்தில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டு அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசாருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே நாகராஜை போலீசார் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கவிதாவை கொன்றதுடன், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக நாகராஜ் நாடகமாடியது உறுதியானது. பின்னர் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்