குழந்தையை தன்னிடம் இருந்து பறித்ததாக கதறிய கணவர் -மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு
குடும்ப பிரச்சினையில் குழந்தையை மனைவியிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டதால் ஐகோர்ட்டு வளாகத்தில், அப்பெண்ணின் கணவர் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை,
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நான் எனது பெற்றோர் வீட்டில் மகள், மகனுடன் வசித்து வருகிறேன். எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி அன்று எனது வீட்டுக்குள் புகுந்த எனது கணவர், 3 வயது ஆண் குழந்தையை கடத்திச்சென்றுவிட்டார். எனவே எனது 3 வயது குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
ஒப்படைக்க மறுப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மணவாளன் ஆஜராகி, குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
இந்தநிலையில், மனுதாரரின் கணவர் கண்ணதாசன், தனது 3 வயது குழந்தையுடன் கோர்ட்டில் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.
அவரிடம் இருந்த குழந்தையை மனுதாரர் பிரபா தேவியிடம் ஒப்படைக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் கண்ணதாசன் குழந்தையை ஒப்படைக்க முடியாது என மறுத்தார்.
குழந்தையை ஒப்படைத்தால்தான் உரிய விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க இயலும் என நீதிபதிகள் தெரிவித்த உடன், தன்னிடம் இருந்த குழந்தையை மனைவி பிரபாதேவியிடம் ஒப்படைத்தார்.
4 நாட்கள் சந்திக்க அனுமதி
இதையடுத்து கண்ணதாசன் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.மூர்த்தி, "குழந்தைகளை தந்தை என்ற முறையில் கண்ணதாசன் சந்திக்க அனுமதிக்க வேண்டும்" என்று வாதாடினார்.
இந்த வழக்கு விசாரணை முடிவில், மனுதாரர் வீட்டில் உள்ள குழந்தைகளை தந்தை என்ற முறையில் கண்ணதாசன் வருகிற 2 வாரத்தில் 4 நாட்கள் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கு வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இரு தரப்பினரும் இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
அன்றைய தினம் அந்த குழந்தை யாரிடம் இருக்க விரும்புகிறது என்பதை பொறுத்து குழந்தையை உரிய நபரிடம் ஒப்படைக்க உத்தரவிடுவோம் என்றனர்.
கதறி அழுததால் பரபரப்பு
இதையடுத்து குழந்தையுடன் பிரபாதேவி தரப்பினர் கோர்ட்டைவிட்டு வெளியேறினர். கோர்ட்டு அறையை விட்டு வெளியே வந்த கண்ணதாசன், குழந்தையை தன்னிடம் இருந்து பறித்து விட்டார்களே என்று கூறி கதறி அழுதார். தன்னுடன் மனைவியையும், குழந்தைகளையும் சேர்த்து வையுங்கள் என்று கோர்ட்டு வளாகத்தில் கூச்சலிட்டு கதறி அழுதார். இந்த சம்பவத்தால் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.