குரூப்-4 தேர்வு விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கு - டி.என்.பி.எஸ்.சி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குரூப்-4 தேர்வு விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-04-26 20:05 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி வெளியானது. அதில் எனக்கு 121.50 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இந்த தேர்வின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு நடந்து உள்ளது. விடைத்தாளை ஸ்கேனிங் செய்து, மதிப்பீடு செய்ததில் தவறு நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுசம்பந்தமாக முறையான விசாரணை நடத்தப்படவில்லை. ஆனால் குரூப்-4 பணி நியமன நடைமுறைகள் நடந்து வருகிறது. என்னுடைய ஓ.எம்.ஆர். விடைத்தாளை வழங்க வேண்டும் என்றும், அந்த பணிகளில் எனக்கு ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், குரூப்-4 பணி நியமன நடைமுறைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. எனவே அந்த நடைமுறைகள் முடிவடைந்ததும் மனுதாரரின் விடைத்தாள் நகலை டி.என்.பி.எஸ்.சி. வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்