இளைஞர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கோரி வழக்கு - 12 வாரத்தில் தமிழக அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இளைஞர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு 12 வாரத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..
மதுரை
இளைஞர்கள் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு 12 வாரத்தில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..
உலக இளைஞர்கள் தினம்
கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். ஜனவரி 12-ந்தேதியன்று உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
நாட்டின் எதிர்கால தூண்களான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவது தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை இளைஞர்களிடையே ஏற்படுத்துவது அவசியம். இந்த நிலையில் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 8 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்த வரிசையில் உலக இளைஞர்கள் தினத்தையும் சேர்த்து அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்.
மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உலக இளைஞர்கள் தினத்தன்று ஏற்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, உலக இளைஞர்கள் தினத்தன்று தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பரிசீலித்து நடவடிக்கை
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை கமிஷனர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை செயலாளர் மற்றும் தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு 12 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.