மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டின்கீழ் நியமிக்கப்பட்டகிராம உதவியாளரை பணி நீக்குவது தொடர்பான நோட்டீசுக்கு தடை-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டின்கீழ் நியமிக்கப்பட்டகிராம உதவியாளரை பணி நீக்குவது தொடர்பான நோட்டீசுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-06-20 20:35 GMT


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சக்கம்மாள்புரத்தை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் மாற்றுத்திறனாளி. கடந்த அக்டோபர் மாதம் விளாத்திகுளம் தாலுகாவில் காலியாக இருந்த 17 கிராம உதவியாளர் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அந்த பணிக்கு நானும் விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று, கிராம உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

நான் 60 சதவீத மாற்றுத்திறனாளி என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்கீழ் கிராம உதவியாளர் பணியை எனக்கு வழங்கியுள்ளனர். தற்போது விளாத்திகுளம் தாலுகா முத்தையாபுரத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறேன்.

இந்தநிலையில் திடீரென என்னை பணி நீக்கம் செய்வது குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று, நான் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டின்கீழ் பணி நியமனம் பெற்று உள்ளேன். எனவே என்னை பணி நீக்கம் செய்யும் நடைமுறைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனாலும் இதுவரை எனது கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பணி நீக்கம் குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் மாரீஸ்குமார் ஆஜராகி, மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான மாற்றுத்திறனாளி பிரிவின்கீழ் பணி நியமனம் பெற்று உள்ளார். ஆனால் அதிகாரிகளோ, மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான முஸ்லிம் பிரிவில் அந்த பணிக்கு நியமிக்கப்பட்டதாக தவறாக கருதி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும்படியும் அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்