வணிகநோக்கில் நீர்வழிப்பாதையை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய ரிசார்ட் அதிபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வணிகநோக்கில் நீர்வழிப்பாதையை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகளை 3 மாதத்தில் மூட வேண்டும் என்றும், அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-01-23 20:16 GMT


வணிகநோக்கில் நீர்வழிப்பாதையை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகளை 3 மாதத்தில் மூட வேண்டும் என்றும், அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

செயற்கை நீர்வீழ்ச்சிகள்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த வினோத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான இயற்கை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன. குற்றலாம் உள்ளிட்ட அருவிகள் பாயும் இடங்களில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.

பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அருவிகளை சுற்றிலும் ஏராளமான ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, இணையதளங்களில் விளம்பரம் செய்து வருமானம் கொழிக்கின்றனர்.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையாக செல்லும் நீரோடைகளை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆய்வு நடத்த 10 பேர் குழு

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, செயற்கை நீர்வீழ்ச்சிகளை அனுமதியின்றி அமைத்துள்ள ரிசார்ட்டுகளை ஆய்வு செய்து, விதிமீறி இருந்தால் அவற்றுக்கு சீல் வைக்க வேண்டும். இதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, 10 அதிகாரிகள் கொண்ட குழுவை ஏற்படுத்தி உள்ளோம் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

ரிசார்ட்டுகளை மூட வேண்டும்

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மலைகளில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனவா? என்பது குறித்து ஏற்கனவே இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர், ஆய்வு நடத்தி 3 மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகள் உள்ளிட்டவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக நோக்கத்தில் நீர்வழிப்பாதையை மாற்றி இது போன்ற செயல்களில் ஈடுபட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலை அடிவாரத்தில் உள்ள ஆதீனத்திற்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அங்கு சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு இருந்தால், குத்தகை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக 3 மாதத்தில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்