நீர்நிலைகளை முறையாக தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு -நீர்வள ஆதார அமைப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நீர்நிலைகளை முறையாக தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நீர்வள ஆதார அமைப்பு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-04-15 19:58 GMT


நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் விதிகளின்படி தூர்வாரும் பணிகள் முடிக்கவில்லை. தரமில்லாத வகையில் பணிகளை நடத்தி, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பிரான்சேரிகுளம், சுப்ரமணியபுரம் கீதாகுளம் உள்ளிட்ட 14 குளங்களில் பெயரளவில் தூர்வாரும் பணிகளை செய்து உள்ளனர். தரமான ஷட்டர்கள், கான்கிரீட் போன்றவை அமைக்கப்படவில்லை. 14 குளங்களில் மோசடியாகவே பணிகள் நடத்தப்பட்டு உள்ளன. குடிமராமத்து பணிகளை செயல்படுத்துவதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை.எனவே குடிமராமத்து பணிகள் நடந்த குளங்களில் முறையாக சீரமைப்பு பணிகளை நடத்தி, கான்கிரீட் மற்றும் ஷட்டர்களை பலப்படுத்த வேண்டும். தரமற்ற பணிகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், வைப்பாறு மற்றும் தாமிரபரணி பாசன கோட்ட செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்