நிதி நிறுவன சொத்துகளை முடக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிதி நிறுவனம் நடத்தி ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அந்த நிறுவன சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நிதி நிறுவனம் நடத்தி ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அந்த நிறுவன சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பல கோடி ரூபாய் மோசடி
நெல்லையைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் மாத தவணையாக பணம் செலுத்தினால் முதிர்வு காலத்தில் இரண்டே முக்கால் சென்ட் பிளாட் தருவதாக கூறினர். நிலமும், மாத பரிசும் வழங்குவதாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.
இதன்படி ஏராளமானோர் இந்த திட்டத்தில் சேர்ந்தனர். முழு பணமும் செலுத்தி திட்டம் முதிர்வடைந்ததும், அவர்கள் உறுதி அளித்ததை போல, பிளாட்டை பதிவு செய்து தராமல் ஏமாற்றினர்.
இதேபோல தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பணம் வசூலித்து ஏராளமான முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். ஆயிரத்திற்கும் ேமற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
விரைந்து முடிக்க வேண்டும்
இந்த மோசடி குறித்த புகார்களின் அடிப்படையில் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே, முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தரும் வகையில் நிறுவனத்தினரின் அசையும், அசையா சொத்துக்களை முடக்கவும், விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
3 மாதத்தில் முடிக்க உத்தரவு
இந்த மனுவை நீதிபதி சத்திகுமார் விசாரித்தார்.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை இன்னும் 3 மாதத்தில் முடியும் என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் முறையான அனுமதி பெற வேண்டும்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசின் உயர் அதிகாரி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். அதை கூடுதல் டி.ஜி.பி. கண்காணிக்க வேண்டும். அந்த நிதி நிறுவன சொத்துக்களை முடக்க மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.