மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு சிறப்பு ரெயில்: சென்னையில் இருந்து 1,300 பேர் பயணம்

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து 1,300 பேர் ஏ.சி. ரெயிலில் புறப்பட்டுச் சென்றனர்.

Update: 2023-08-18 21:51 GMT

சென்னை,

அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

மதுரை மாநாட்டில் சுமார் 15 லட்சம் தொண்டர்களை பங்கேற்க செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்களை பல்வேறு வாகனங்களில் மாநாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்காக மாவட்டங்கள்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு தொடர்பான கூட்டங்களையும் மாவட்ட செயலாளர்கள் நடத்தி வருகிறார்கள்.

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பில் மதுரை மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பங்கேற்க செய்யவேண்டும் என்ற இலக்குடன் அ.தி.மு.க.வின் சென்னை மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து வேன், பஸ், கார், ரெயில், விமானம் உள்பட பல்வேறு மார்க்கங்களில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்கு செல்ல இருக்கிறார்கள்.

ஏ.சி. ரெயிலில் பயணம்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், தியாகராயநகர் சத்யா ஆகியோர் ஏற்பாட்டில் அ.தி. மு.க.வினர் சிறப்பு ரெயில் மூலம் எழும்பூரில் இருந்து மதுரை மாநாட்டில் பங்கேற்க செல்கின்றனர். 14 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயிலில் 13 பெட்டிகள் குளு, குளு ஏ.சி. வசதிகளை உள்ளடக்கியது. எழும்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டுச் சென்ற இந்த ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர். சிறப்பு ரெயிலின் பக்கவாட்டு கண்ணாடிகளில், மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பான வாசகங்களுடன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன் நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) காலை மதுரை சென்றடைகின்றது. மாநாடு நிறைவடைந்த பின்னர் மறுமார்க்கமாக நாளை இரவு மதுரையில் இருந்து புறப்பட்டு சிறப்பு ரெயிலில் அ.தி.மு.க.வினர் எழும்பூர் வந்தடைகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்