மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை - 6 வாரங்களுக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித்தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மருத்துவ மேற்படிப்பின்போது மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித்தொகை வழங்குவதை மருத்துவக் கல்லூரிகள் மறுக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரி, அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மேற்படிப்பு மாணவர்கள் மருத்துவமனைகளில் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது மாணவர்கள் தங்கள் படிப்பு கட்டணத்தை செலுத்தாததால் உதவித்தொகை கோர உரிமை இல்லை என மருத்துவக் கல்லூரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் தற்காலிகமாக கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் மூன்றாண்டுகள் தங்களிடம் உழைப்பை பெற்றதாகவும் மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து கல்லூரிகள் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஆறு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.