நகரப் பஸ்கள் கொள்முதலுக்கு தடை கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
1,107 நகரப் பஸ்கள் கொள்முதலுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய 1,107 நகர பஸ்கள் உள்பட 1,771 பஸ்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.
இதையடுத்து 1,107 நகரப் பஸ்கள் கொள்முதலுக்கு தடை கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி மீட்டர் உயர தளத்துடன் நகர பஸ்களை கொள்முதல் செய்வதற்கு பதில் 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது சட்டவிரோதமானது.
மேலும், 900 மில்லிமீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகளால் ஏற முடியாது என்பதால், 1,107 பஸ்கள் கொள்முதல் தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.