தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "மருத்துவ கவுன்சிலின் வாக்காளர் பட்டியல் வெளியிடாமல் தேர்தல் நடத்தப்படுவதாகவும், தேர்தல் நியாயமாக நடத்த ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும்" என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதி, "தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்த வகை செய்யும் 1914-ம் ஆண்டு சென்னை மருத்துவப் பதிவு சட்டத்தில், ஆந்திரா மற்றும் சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களும், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திரா பல்கலைக்கழக செனட் உறுப்பினரையும், விசாகப்பட்டினர் மருத்துவ கல்லூரி மருத்துவரையும் எப்படி நியமிக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "இந்த சட்டமும், விதிகளும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்தப்படும்" என்றார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "மனுதாரர்கள் சட்டம் குறித்து கேள்வி எழுப்பவில்லை" என கூறினார்.
இரு தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என உத்தரவிட்டார். மேலும், தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்து விதிகளை வகுக்கவும் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.