பட்டா நிலத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, மயான நிலத்தை மீட்க உத்தரவிடக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

பட்டா நிலத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, மயான நிலத்தை மீட்க உத்தரவிடக் கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-19 07:37 GMT

சென்னை,

பட்டா நிலத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, மயான நிலத்தை மீட்க உத்தரவிடக் கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முக்கண்டபள்ளியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஓசூர் தாலுகாவிற்குட்பட்ட ஒன்னல்வாடி கிராமத்தில் மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து, ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான டாலர்ஸ் காலனி டெவலப்பர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்வதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 2018-ஆம் ஆண்டிலேயே தமிழக அரசின் பல்வேறு துறைகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடும் நில அளவை எண்களுக்கு உட்பட்ட நிலங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்ததுடன், அவற்றில் மயான பகுதி ஏதும் இல்லை என்றும், பட்டா நிலம்தான் என்றும் விளக்கம் அளித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மற்றொரு நில அளவை எண்ணில் மயானப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

மனுதாரர் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட நிலத்தை வழக்கு மனுவில் தெரிவித்துவிட்டு, அதில் அரசு விளக்கம் அளித்த பிறகு, மற்றொரு நிலத்தை சுட்டிக்காட்டி விசாரணை நடத்த வேண்டுமென்ற மனுதாரரின் கோரிக்கையை அனுமதிக்க முடியாது என்று கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அபராதத் தொகையை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஸ்ரீ கோசாலா சேவை அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்