அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

Update: 2022-07-10 10:25 GMT

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு நாளை காலை 9 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், கோர்ட் தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என்பது தெரியும்.

நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று இரு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் இன்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை ஐகோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார். இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்குமா? என்பது தொடர்ந்து எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் நீடிக்கிறது.

ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் பொதுக்குழுவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில், உள்ளனர். கோர்ட் பச்சைக்கொடி காட்டும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யவும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்