காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், 'மேட் இன் சீனா' வாசகம் - சபாநாயகர் மு.அப்பாவு வருத்தம்

காமன்வெல்த் மாநாட்டில் தரப்பட்ட இந்திய தேசிய கொடியில், ‘மேட் இன் சீனா’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்ததாக சபாநாயகர் மு.அப்பாவு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-27 14:58 GMT

சென்னை:

கனடா ஹாலிபாக்ஸ் நகரில் 65-ஆவது காமன்வெல்த் மக்களவை மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சட்டசபை சபாநாயகர் மு.அப்பாவு மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

மாநாடு நடக்கும் பகுதிக்கு செல்லும்போது அந்தந்த நாட்டு சபாநாயகர்கள் தங்கள் கையில் தங்களின் நாட்டு தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். அதுபோல நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சட்டசபை சபாநாயகர் மு.அப்பாவு ஆகியோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்திச் சென்றனர்.

அவர்கள் ஏந்திச் சென்ற கொடியில் 'மேட் இன் சீனா" (இது சீனாவில் தயாரிக்கப்பட்டது) என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. இது அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி தமிழக சட்டசபை சபாநாயகர் மு.அப்பாவு கூறியதாவது:-

இந்தியாவின் பெருமையாக தேசியக் கொடியை நாங்கள் கையில் ஏந்தியபடி சென்றோம். அந்தக் கொடிகளில், அது சீனா தயாரிப்பு என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றிருந்தது. இதை நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தோம்.

இது அனைவருக்குமே மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்திய தேசிய கொடியை சீனாவில் தயாரித்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் அதிக அளவில் உள்ள அச்சகங்களில் இன்று இரவு கூறினால், மறுநாள் காலையில் கொடிகளை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட நிலை ஏன் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்