குறைவான நாட்களில் நிறைவான லாபம் தரக்கூடிய தர்பூசணி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
அதிக மகசூல்
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
தமிழகத்தின் பல பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. அதிக மகசூல் பெறும் நோக்கத்தில் அதிக உரம், அதிக மருந்து, அதிக நீர் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்தினால் கடும் மகசூல் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.பயிர் வளர்ச்சி ஊக்கி எத்ரல் பயன்படுத்துவதாலும், பரிந்துரைப்படி கரையும் உரப்பாசனம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் நுனி கிள்ளுதல் முதலிய உத்திகள் மூலம் தர்பூசணி மகசூலை அதிகரிக்க முடியும்.அதிகம் நீர் தேங்காத, வளமான மண்ணுள்ள இடத்தில் தர்பூசணி நன்கு வளரும். ஆனால் அதிக பனியை தாங்காது.
மித வெப்பம், அளவான ஈரப்பதம், நல்ல சூரிய ஒளி உள்ள காலங்களே தர்பூசணி சாகுபடிக்கு ஏற்றதாகும்.
பழங்கள் முதிர்ச்சி அடையும் போது அதிக வெப்ப நிலை இருந்தால் பழங்களின் இனிப்பு சுவை கூடுதலாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ஜனவரி பிப்ரவரி மாதங்களில் மற்றும் ஜூன் ஜூலை மாதங்களில் தர்பூசணி சாகுபடி செய்வது சிறந்தது. தர்பூசணி சாகுபடியில் அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் அல்லது 5 டன் மண்புழு உரம் இடலாம். 5 முதல் 7 நாட்களுக்குள் விதைகள் முளைத்து விடும்.15 நாட்கள் வரை உயிர் தண்ணீர் சிறிது சிறிதாக விட வேண்டும்.பின்னர் நிலத்தின் தன்மைக்கேற்ப பாய்ச்சலும் காய்ச்சலும் முறையில் நீர் நிர்வாகம் செய்ய வேண்டும். இயற்கை முறையில் பஞ்சகாவியா மற்றும் அமுதக் கரைசலை தயார் செய்து பயன்படுத்தினால் பூச்சி நோய் தாக்குதல், களை ஆகியவற்றை தவிர்க்க முடியும். அத்துடன் பழத்தின் தரமும் சுவையும் நன்றாக இருக்கும்.
50 ஆயிரம் நாற்றுக்கள்
தர்பூசணி சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ 8000 மதிப்புள்ள 2000 எண்கள் தர்பூசணி நாற்றுக்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும்.தற்போது மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு 25 ஏக்கருக்கு ரூ 2 லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம் தர்பூசணி நாற்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த மானியத் திட்டத்தில் மடத்துக்குளம் வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் தர்பூசணி சாகுபடியில் விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுக்கக் கூடிய நிலப்போர்வை மானியமும் தனியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இது தவிர தர்பூசணி மற்றும் காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அரசு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு துங்காவி உள்வட்ட விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் உள்வட்ட விவசாயிகள் நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.