கம்பம் பஸ் நிலையத்தில் கிடந்ததங்க மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த முதியவர்
கம்பம் பஸ் நிலையத்தில் கிடந்த தங்க மோதிரத்தை போலீசில் முதியவர் ஒப்படைத்தார்.
உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 73). நேற்று முன்தினம் இவர் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் ஆனைமலையான்பட்டி செல்வதற்காக நின்றார். பின்னர் அவர் கடையில் டீ குடித்தபோது கைப்பையை அங்கு வைத்திருந்தார். அதற்குள் சுமார் 2½ பவுன் தங்க மோதிரம் இருந்தது. டீ குடித்த பின்பு பார்த்தபோது பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே சுமை தூக்கும் தொழிலாயான வடமல் (62) என்பவர் பஸ் நிலையத்தில் கிடந்த கைப்பையை எடுத்து பார்த்தார். இதையடுத்து அந்த பையை அவர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் ஒப்படைத்தார். அதனை சின்னப்பனிடம் போலீசார் வழங்கினர். பின்னர் மோதிரத்தை ஒப்படைத்த வடமலுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.