சென்னை அண்ணாநகரில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்; தொழில் அதிபர் பலத்த தீக்காயம்
சென்னை அண்ணாநகரில் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்தது. காரின் கதவை திறக்க முடியாததால் உள்ளே சிக்கிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரமணாவின் உறவினர் பலத்த தீக்காயம் அடைந்தார்.
திரு.வி.க.நகர்,
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). தொழில் அதிபரான இவர், நேற்று காலை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள தனது உறவினரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான ரமணா வீட்டுக்கு தனது சொகுசு காரில் வந்தார். காரை அவரே ஓட்டினார்.
ரமணா வீட்டின் முன்புறம் கார் வந்து நின்றதும், கணேசன் கீழே இறங்காமல் காருக்குள் அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென காரின் என்ஜின் பகுதியில் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் காரின் முன்பகுதி லேசான சேதம் அடைந்தது.
கார் தீப்பிடித்து எரிந்தது
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன், காரில் இருந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகள் 'லாக்' ஆனதால் அவரால் கதவை திறந்து வெளியே வரமுடியவில்லை. அதற்குள் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. காரின் கதவை அவர் பலமாக தட்டியபடி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த ரமணா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காரில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்து, உள்ளே சிக்கிய கணேசனை மீட்க முயன்றனர்.
பலத்த தீக்காயம்
ஆனால் அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. கணேசன் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. தீக்காயம், புகை மூட்டத்தால் காருக்குள்ளேயே கணேசன் மயங்கினார். இதையடுத்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, காருக்குள் 60 சதவீத தீக்காயத்துடன் இருந்த கணேசனை காப்பாற்றி, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார் மற்றும் ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.