சென்னையில் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் - பிர்லா கோளரங்க இயக்குனர் தகவல்

சென்னையில் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று பிர்லா கோளரங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 00:51 GMT

சென்னை,

பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனின் நேரடியான ஒளியைப்பெற இயலாது போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திரகிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின்போது சூரியனின் எதிர்த்திசையில் நிலவு வருவதால் சந்திரகிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும்.

நிலவு முழுமையாக பூமியின் முழுநிழல் பகுதியில் மறைவது முழு சந்திரகிரகணமாகும். பகுதி சந்திரகிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதியில் முழுநிழல் பகுதி படியும். எனவே முழுநிழல் பகுதியில் சூரியஒளி நேரடியாகப் படிவதில்லை. எனவே நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். இது பகுதி சந்திரகிரகணமாகும்.

பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திரகிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் காணலாம். முழு சந்திரகிரகணம் வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைகிறது.

சென்னையில் மாலை 5.38-க்குத்தான் சந்திரன் உதயமாகும். எனவே முழு கிரகணத்தைக் காண இயலாது. ஆனால் 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்குத் தொடுவானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம்.

மேற்கண்ட தகவல்களை சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் (பொறுப்பு) சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்