பனிபொழிவால் வரத்து குறைவு: மதுரை மல்லிகை விலை 'கிடுகிடு' உயர்வு

மதுரையில் பனிப்பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

Update: 2023-02-09 20:16 GMT


மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன்குண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு மல்லிகை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கே கொண்டுவரப்படும் பூக்கள், விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொடும்.

இந்தநிலையில், மதுரையில் பனிப்பொழிவு காரணமாக மதுரை மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.1800 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல், பிச்சி ரூ.1000, முல்லை ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, பட்டன் ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.100 என விற்பனையானது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மதுரை மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள கிராமங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட மல்லிகையின் விலை தற்போது ரூ.2 ஆயிரத்தை தொட்டிருக்கிறது, என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்