அதிராம்பட்டினம் கடற்பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து குறைவு
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி மீன் ரூ.250-க்கு விற்கப்படுகிறது.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் ஒரு கிலோ வெள்ளி மீன் ரூ.250-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி மீன்கள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியான ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஆகிய துறைமுக பகுதி மீனவர்கள் தொடர்ந்து வெள்ளி மீன்களை பிடிப்பதற்கு மட்டும் அதற்குள்ளான வலைகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று வெள்ளி மீன்களை பிடித்து வருகின்றன. வெள்ளி மீன்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சிக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் இந்த மீன்கள் அதிகமாக சிக்கும். இந்த மீன்களை பிடிக்க இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வலைகளை மீனவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ரூ.250-க்கு விற்பனை
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தற்போது சீசன் தொடங்கியும் வெள்ளி மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி மீன்கள் தற்போது 1கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பிடிபடும் மீன்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படாததால் உள்ளூரில் இந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: இந்த மீன்களுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு வெள்ளிமீன், தேசப்பொடி, வெள்ளைபொடி, பொடிமீன் கேரளாவில் மட்லீஸ் என பல்வேறு பெயர்களை வைத்து மக்கள் அழைக்கிறார்கள். கேரளாவில் இந்த மீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பிடிப்படும் மீன்கள் ஏஜெண்டு மூலம் கேரளாவுக்கு ஏற்றுமதியாகி வந்தது. ஆனால் தற்போது மீன் வரத்து குறைவாலும் ஏற்றுமதி இல்லாததாலும் உள்ளூர் மார்க்கெட்டுக்கு மட்டும் மீன்கள் விற்பனையாகி வருகிறது.