கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த காதலர்கள்
காதலர் தினத்தையொட்டி கடலூர் சில்வர் பீச்சில் காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் ஜோடியாக சுற்றித்திரிந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
கடலூர்:
காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூரிலும் காதலர் தினத்தை காதல் ஜோடிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று முன்தினம் இரவே காதலர்கள் செல்போன்களை கீழே வைக்காத அளவுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். காதலின் சின்னமான இதயத்தை அதிகமாக பகிர்ந்தனர்.
முன்பு வாழ்த்து அட்டைகள் கொடுத்து காதலை வெளிப்படுத்தி வந்தனர். இப்போது சமூக வலைதளங்களில் தங்கள் காதல், வாழ்த்துகளை கொட்டினர். கடலூர் சில்வர் பீச்சுக்கு காலை முதலே காதல் ஜோடிகள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல அதிகம் பேர் வரத்தொடங்கினர். அவர்கள் கடற்கரையோரம் ஜாலியாக நடந்தபடி சென்றனர். சிலர் கடல் அலையில் கால்களை நனைத்தபடி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
காதல் மொழி
புதுச்சேரி, கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த காதலர்களும் ஜோடி, ஜோடியாக மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் வந்தனர். புதுமண தம்பதிகளும், காதல் திருமணம் செய்த தம்பதியினரும் வந்திருந்தனர். ஒருவருக்கொருவர் கைகோர்த்தும், தோளோடு தோள் உரசிக்கொண்டு ஜாலியாக கடற்கரையில் உலா வந்தனர். செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காதலர்கள் காதல் மொழி பேசியபடி கடற்கரை மணலில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க இளம்பெண்கள் தங்களது துப்பட்டா மற்றும் சேலையால் காதலன் மீது போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். கடற்கரையோரம் உள்ள நிழலிலும் காதல் ஜோடிகள் அமர்ந்து இருந்தனர். இதேபோல் மாநகராட்சி பூங்காவிலும் ஒரு சில காதல் ஜோடிகள் வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சிலர் போலீசாருக்கு பயந்து வரவில்லை. காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விற்பனை தீவிரமாக நடந்தது. மல்லிகை பூ விற்பனையும் சூடுபிடித்தது.