'இன்ஸ்டாகிராம்' மூலம் மலர்ந்த காதல்... காதலியை சந்திக்க வந்த வாலிபருக்கு அடி-உதை; 3 வாலிபர்கள் கைது

சென்னை மண்ணூர்பேட்டையில் காதலியை சந்திக்க வந்த வாலிபரை அடித்து உதைத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-31 09:46 GMT

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் கார்த்திக் (வயது 20). ஏ.சி.மெக்கானிக். இவருக்கு, அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் கார்த்திக், தனது காதலியை பார்ப்பதற்காக மண்ணூர்பேட்டை பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூரியன் (21), அருண் (19), சுதாகர் (20) ஆகியோர் லட்சுமணன் கார்த்திகிடம், "எங்க ஏரியா பெண்ணை எப்படி காதலிக்கலாம்?" என கேட்டு பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் கார்த்திக், நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் காதலியை பார்ப்பதற்காக அம்பத்தூர் மண்ணூர்பேட்டைக்கு சென்றார். ஏற்கனவே எச்சரித்த நிலையில் மீண்டும் அங்கு வந்த லட்சுமணன் கார்த்திக்கை சூரியன், அருண், சுதாகர் ஆகியோர் கட்டையால் தாக்கியதுடன், சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்