காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-04-12 19:43 GMT

சேலம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவனத்தில் வேலை

சேலம் அருகே உள்ள வடக்கு அம்மாபேட்டை சக்திநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த கண்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

தினேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மனைவியிடம் சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். இதற்கு அவர் 'உப்புமா' இருக்கிறது என்றார்.

இதையடுத்து அவர் மனைவியிடம் கடைக்கு சென்று முட்டை வாங்கி வந்து 'முட்டை பொரியல்' செய்து தருமாறு தெரிவித்தார். இதையடுத்து கண்மணி வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று முட்டை வாங்கி வந்தார்.

தற்கொலை

அப்போது தினேஷ்குமாரின் அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கணவர் திறக்காததால் கண்மணி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வேகமாக வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு தினேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, அக்கம்பக்கத்தினர் தினேஷ்குமாரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் தினேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்