காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை முயற்சி

விழுப்புரத்தில் காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

Update: 2023-03-10 18:45 GMT

விழுப்புரம்

காதல் திருமணம்

விழுப்புரத்தை அடுத்த கஞ்சனூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). இவர் கடந்த 2014-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அம்பலப்பட்டியை சேர்ந்த மணிமேகலை (39) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மணிமேகலை கடந்த 2006-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது மணிமேகலை, தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஜெயகவுரி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு மிதுன்சாய், நித்தேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

தற்போது போலீஸ் ஏட்டாக இருக்கும் மணிமேகலை, சென்னை, திருவல்லிக்கேனி உள்ளிட்ட மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்தான் சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு இடமாறுதலாகி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மணிமேகலை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் நலன் காக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார்.

பெண் ஏட்டு தற்கொலை முயற்சி

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் சமையல் அறைக்கு சென்ற மணிகேமலை, அங்கிருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். இவருடைய அலறல் சத்தம் கேட்டதும் நடராஜன் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் மணிமேகலை பலத்த தீக்காயமடைந்தார்.

உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மணிமேகலை தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்