லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருவெண்ணெய்நல்லூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பெரியசெவலை கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவா் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இம்ரான்கான்(வயது 76) என்பதும், தப்பி ஓடியவர்கள் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த ஜான்பாஷா (45), சரவணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாயவன் (76) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரான்கானை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஜான்பாஷா, மாயவன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மேலும் இம்ரான்கானிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.