செம்பட்டி அருகே லாரி கவிழ்ந்து 250 வாத்துகள் சாவு

செம்பட்டி அருகே லாரி கவிழ்ந்து 250 வாத்துகள் பரிதாபமாக இறந்தன.

Update: 2022-12-06 17:03 GMT

செம்பட்டி அருகே லாரி கவிழ்ந்து 250 வாத்துகள் பரிதாபமாக இறந்தன.

வாத்து ஏற்றிச்சென்ற லாரி

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் மேரி (வயது 34). வாத்து வியாபாரி. இவர் தேனி மாவட்டம் குச்சனூரில் இருந்து 2,500 வாத்துகளை விலைக்கு வாங்கினார். பின்னர் அந்த வாத்துகளை, ஒரு லாரியில் ஏற்றி குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

லாரியை குளித்தலையை சேர்ந்த ரஞ்சித் (30) ஓட்டினார். மேரி மற்றும் அவரது மகன் செல்வகுமார் (16) ஆகியோரும் லாரியில் பயணம் செய்தனர். செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் நேற்று காலை லாரி சென்று கொண்டிருந்தது.

சாலையோரத்தில் கவிழ்ந்தது

செம்பட்டியை அடுத்த சேடப்பட்டி அருகே உள்ள குதிரை கோவில் என்னுமிடத்தில் லாரி வந்தது. அப்போது, சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த புருஷோத்தமன் (42) ஓட்டி சென்றார். காரில் 3 பேர் பயணம் செய்தனர்.

இந்தநிலையில் அந்த கார், லாரியை முந்தி செல்ல முயன்றது. அந்த நேரத்தில், எதிரே ஒரு கார் வந்தது. இதனால் அந்த கார் மீது மோதாமல் இருக்க, புருஷோத்தமன் தனது காரை இடதுபுறமாக திருப்பினார்.

அப்போது வாத்து ஏற்றி சென்ற லாரி மீது, புருஷோத்தமன் ஓட்டி வந்த கார் உரசியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

250 வாத்துகள் சாவு

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 250 வாத்துகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மேலும் லாரி டிரைவர் ரஞ்சித், லாரியில் பயணம் செய்த மேரி, செல்வக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்தில் சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் சென்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

உடல்கள் பரிசோதனை

இதற்கிடையே விபத்தில் இறந்த வாத்துகளின் உடல்கள், ஆத்தூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு ஆத்தூர் பகுதியிலேயே புதைக்கப்பட்டன. மேலும் விபத்தில் உயிர் பிழைத்த வாத்துகள் மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டு குளித்தலைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்