மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பலி
வி.கைகாட்டி அருகே மின்சாரம் பாய்ந்து லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே காவனூர் அம்பாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் ஆனந்த்ராஜ் (வயது 27). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு அஜய் (1) என்ற மகன் உள்ளார். ஆனந்த்ராஜ், முனியங்குறிச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் சிமெண்டு ஆலை சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் டிப்பர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று பணியில் இருந்தபோது சுரங்க அலுவலகத்தின் முன்பு லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க கதவு சரியாக மூடாததால் டிப்பரை மேலே உயர்த்தி கதவை சரி செய்துள்ளார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் டிப்பர் பட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து பலி
இதனை கவனிக்காத ஆனந்த்ராஜ் லாரியில் ஏறும் போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை சக தொழிலாளர்கள் மீட்டு விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்த்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.